தூரத்து மலையடிவார மாலை வேளை
நிழல் மேலும், நிசம் கீழுமாய்
இடம் மாறி, அடிவார மலைமீது
மலையேறி நிற்பதுபோல்
வரிசையாய் மேற்கு தொடர்ச்சி மேகங்கள்
இடையில், மலையின் மடியில்
மாலை கதிரவன் சிகப்பும் மஞ்சளுமாய்
முன்னும் பின்னும் நிறம் மா(ற்)றி
நீங்கி கொண்டிருந்தான் -
புவிப்பாதியில் அரங்கேறியது அஸ்தமனம்
சென்ற இடத்தில்...
அழகிய நீரோடை...,
அதில் நீந்தும் மீன் குஞ்சுகள்,
பக்கவாட்டு படித்துறை சிற்பங்கள்,
பசுமை போர்த்திய வயல்கள்,
இடைவெளி இல்லா தரு நிழல்கள் -
இருமருங்கிலும் அடர்வனமாய்,
காட்சிக்கினிய வண்ணக் கிளிகள்,
காதுக்கினிய குயில் இசை...
என்னைச் சுற்றிலும் இப்படி
எத்தனையோ நிகழ்வுகள்
அழகாய் இருந்தும்
எதையும் ரசிக்க இயலவில்லை
எனக்குள் நீ மட்டுமே
அழகாய் தோன்றித் தொலைப்பதால்!
Posted at 10:45 pm by
passingcloud